பிரேசில் 1970ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் பிரிட்டோ (Brito) தனது 86-வது வயதில் காலமானார்.
நியூமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1939 ஒகஸ்ட் 9ஆம் திகதி பிறந்த இவர், 1964இல் பிரேசில் தேசிய அணியில் அறிமுகமானார். அத்துடன் 1966 உலகக் கோப்பையில் போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியில் முதன்முதலாக உலகக் கோப்பை அரங்கில் களம் இறங்கினார்.
மேலும், “தி பியூட்டிபுல் டீம்” என்று போற்றப்பட்ட 1970 பிரேசில் அணியின் மையப் பின்கள வீரராக (Central Defender) விளையாடினார். அந்தத் தொடரின் 6 போட்டிகளிலும் ஒரு நிமிடம் கூட மாற்றப்படாமல் முழுமையாக விளையாடி அணிக்கு வெற்றிக் கிண்ணத்தை பெற்றுத் தர முக்கிய பங்காற்றினார்.
இதனைத் தொடர்ந்து 1964 முதல் 1972 வரை பிரேசில் அணிக்காக 61 போட்டிகளில் விளையாடி 45 வெற்றிகள், 11 டிரா மற்றும் வெறும் 5 தோல்விகளை மட்டுமே இவரது அணி சந்தித்துள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பையுடன் சேர்த்து, கோபா ரோகா (1971) மற்றும் டாசா இண்டிபென்டென்சியா (1972) ஆகிய கோப்பைகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















