புத்தளம் ஊடாக சிலாபத்தில் இருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளுக்கும், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் “சிவப்பு” எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்றைய தினம் (08) விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை (09) காலை 8.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புத்தளம் ஊடாக சிலாபத்தில் இருந்து மன்னார் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் மற்றும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே மறு அறிவித்தல் வரை இந்தக் கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினர் மற்றும் மீனவர் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மட்டக்களப்பில் இருந்து மன்னார் வரையான மற்றும் கொழும்பு மற்றும் காலி ஊடாக சிலாபத்தில் இருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், அங்கு மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் மற்றும் மீன்பிடி சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பாக வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகளைக் கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.















