கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகில் ஏற்பட்ட எதிர்பாராத இயந்திரக் கோளாறு காரணமாகவே அவர்கள் கடல் எல்லையைத் தாண்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட 11 மீனவர்களையும், கேரளாவைச் சேர்ந்த ரோஹன் உள்ளிட்டவர்களையும் உடனடியாக தாயகத்துக்கு அழைத்து வர தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
மேலும், மீனவர்களின் வாழ்வாதாரமான படகை அதன் உரிமையாளர் ரமேஷிடம் மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை குற்றவாளிகளாக கருதாமல், பாதுகாப்பாக அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை இருநாடுகளும் இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.
















