கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் கடைசி நேரத்தில் முறிந்ததைத் தொடர்ந்து, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய 50 சதவீத வரிகள் இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன.
கனடியப் பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் நியாயமற்றவை எனக் கூறி, வெள்ளிக்கிழமை இரவு பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியுள்ளார்.
சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனடிய இறக்குமதிகளுக்கு 50 சதவீத வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தார்.
கனடாவுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், கனடியர்களின் நலன்களை உறுதி செய்யும் அளவுக்கு அது போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்ட கார்னி, பேச்சுவார்த்தைக் குழுவினரை ஒட்டாவாவுக்கு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், இந்த வார தொடக்கத்தில் இணங்கிய நிபந்தனைகளின் கீழ் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய கனடா மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, கனடிய எஃகு மற்றும் அலுமினியத்துக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை 50 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும், கனடிய வாகனங்களுக்கான வரியை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும் குறைப்பது தொடர்பில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வரிகள் ஒயின், பால் பொருட்கள், சீமெந்து, ஆடைகள் மற்றும் ஹாக்கி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கனடியப் பொருட்களை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கனடாவின் எஃகு, அலுமினியம், வாகனங்கள் மற்றும் மரக்கட்டைகள் மீது அமெரிக்கா ஏற்கனவே விதித்துள்ள வரிகளுக்கும் மேலதிகமாக இந்த புதிய வரிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு பதிலடியாக அமெரிக்கப் பொருட்களுக்கு சமமான அளவில் வரி விதிக்க கனடா நடவடிக்கை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவின் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டும், அமெரிக்காவுக்கு வலுவான பதிலடி வழங்க பிரதமர் மார்க் கார்னிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், புதிய வரிகள் இரு பொருளாதாரங்களையும் பாதிப்பதுடன், அமெரிக்க நுகர்வோருக்கான செலவுகளையும் அதிகரிக்கக்கூடும் என வர்த்தகத் தரப்பினர் எச்சரித்துள்ளனர்.


















