உலக சுற்றுலா தின விழாவின் இறுதி நாள் நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பங்கேற்பு
மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறை ஆற்றல், இயற்கை வளங்கள், பண்பாட்டு மரபுகள் மற்றும் பாரம்பரியக் கலைகளை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம், ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இவ்விழாவின் இறுதி நாள் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், மன்னார் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் ரஞ்சித் உள்ளிட்ட அரச நிர்வாக மற்றும் பாதுகாப்புத் துறைகளின் உயரதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர்,
மன்னார் மாவட்டம் இயற்கை வளங்கள், அழகிய கடற்கரைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தனித்துவமான பண்பாட்டு மரபுகளைக் கொண்ட முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இவ்வளங்களை முறையாகப் பயன்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம், பிரதேச மக்களுக்குப் புதிய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதுடன், உள்ளூர் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும்.
மன்னாரின் தனித்துவமான அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாத்து, அவற்றைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் இணைப்பது காலத்தின் தேவையாகும். இத்தகைய விழாக்கள் மன்னாரின் சுற்றுலாத்துறை சாத்தியங்களைப் பரந்தளவில் வெளிப்படுத்துவதுடன், உள்ளூர் உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளைப் பரந்த மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்கும் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துகின்றன என்றார்.
வடமாகாண சுற்றுலாப் பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் செப்டம்பர் 25 முதல் 27 ஆம் திகதி வரை இவ்விழா நடைபெற்றது. ஆரம்பத்தில் கீரி கடற்கரையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வுகள், சீரற்ற காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக மன்னார் உப்புக்குளம் அல்-பதாஹ் விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டன.
மூன்று நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் பாரம்பரிய நடனங்கள், தற்காப்புக் கலை நிகழ்ச்சிகள், வில்லுப்பாட்டு, மாயாஜால நிகழ்ச்சிகள், குழுப் பாடல்கள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அத்துடன், உள்ளூர் உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சிகளுடன் உணவுத் திருவிழாவும் நடைபெற்றது. இந்நிகழ்வுகள் பெருமளவிலான மக்களின் கவனத்தை ஈர்த்தன.
விழாவின் முதல் நாள் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே. விவேகானந்தன், மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பங்கேற்றனர். இரண்டாம் நாள் நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கலந்துகொண்டார்.
விழாவின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, தலைமன்னாரிலிருந்து ஆதாம் பாலம் எனப்படும் இராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளைப் பார்வையிடுவதற்கான புதிய சுற்றுலாப் படகுச் சேவையின் பரீட்சார்த்தப் பயணம் செப்டம்பர் 25 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. இச்சேவையைச் செப்டம்பர் 28 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
அத்துடன், தலைமன்னார் கலங்கரை விளக்கைச் சூழவுள்ள பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்ந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, அப்பகுதியில் கடற்கரைப் பூங்கா ஒன்றை உருவாக்குவதற்கான திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் இயற்கை அழகு, வரலாற்று மரபுகள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்களை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உள்ளூர் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் இவ்விழா முக்கிய தளமாக அமைந்தது.
வடமாகாண சுற்றுலாப் பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம், அரச திணைக்களங்கள் மற்றும் உள்ளூர் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும், உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


















