புறக்கோட்டைப் பகுதியில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய விசேட சோதனையின் போது 801 போத்தல்கள் வழக்குப்பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனைகளும் விசாரணைகளும் நடத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முடிவடைந்த பின்னர் குறித்த வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குடிநீரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS 1616 தரம் பொருந்தும்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இதுபோன்ற போத்தல்களுக்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் SLS உற்பத்தி சான்றிதழ் இலச்சினை இருக்க வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் போத்தல்கள் SLSI இறக்குமதி பரிசோதனை முறைமையின் கீழ் பரிசோதிக்கப்பட்டு விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற போத்தல்களைக் கொள்வனவு செய்யும்போது உரிய தரநிலைகள் மற்றும் சட்டத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நுகர்வோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் இடம்பெறும் முறைகேடுகள் பற்றிய தகவல்களை 1977 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்குத் தெரிவிக்க முடியும்.

















