40 ஆவது அகில இலங்கை தேசிய விளையாட்டு போட்டிகளின் காற்பந்தாட்டப் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய சென் பற்றிக்ஸ் கல்லூரியின் 16 வயதுக்குட்டப அணி மாவனல்ல பதூரியா மத்திய கல்லூரியுடன் மோதியது இரு கல்லூரி அணியினரும் தலா ஒரு கோலைப் பெற வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு ( Penalty) உதையில் 02:01 என்ற கோல் கணக்கில் வென்று அகில இலங்கை சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன்
கல்லூரியின் 18 வயதுப் பிரிவு அணி புத்தளம் வேற்றாலை அஷேன்கூடூஸ் முஸ்லீம் வித்தியாலயத்துடனான போட்டியில் இரு கல்லூரி அணியினரும் தலா ஒரு கோலைப் பெற வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக வழங்ப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் (Penalty) 05:04 என்ற கோல் கணக்கில் வென்று அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இப்போட்டியில் வெற்றிபெற்ற சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை A.P.திருமகன் அடிகளாரில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்கள் பாண்ட் வாத்தியத்துடன் பற்றிக்ஸ் பாங்ஷால் வீதி சந்தியிலிருந்து பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.
தொடர்ந்து பாடசாலை பிரதான மத்தியூஸ் மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் வாழ்த்துரைகள், கௌரவிப்புக்களுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்கள், காலணிகள் என்பவை வழங்கி வைக்கப்பட்டன.
காலணிகளுக்கான நிதியனுசரணையை கல்லூரியின் பழைய மாணவர்கள் வழங்கினர்.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ம.டேவிட் அடிகளாரும், கௌரவ விருந்தினராக வடமாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர் ( உடற்கல்வி) திரு. ராஜசீலன் அவர்களும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை பிரதி மேயர் கௌரவ
இ.தயாளன், காற்பந்தாட்ட வீரர்களின் பெற்றோர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

























