ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கத் தயாராகும் ஆஷிகா – அடுத்த இலக்கு ஒக்டோபர் 17!
இலங்கையில் 19 தேசிய சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழும் பளுதூக்கல் வீராங்கனை ஆஷிகா விஜயபாஸ்கர், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கத் தயாராகி வருகின்றார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற Festival National Competition போட்டிகளில் தனது விளையாட்டுப் பயணத்தை ஆரம்பித்த ஆஷிகா விஜயபாஸ்கர், 2020ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் 19 தேசிய சாதனைகளைப் படைத்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பளுதூக்கல் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கியுள்ள அவர், எதிர்வரும் 17.10.2026 அன்று நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
தனது மீள்வருகை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆஷிகா விஜயபாஸ்கர், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கவிருப்பது சற்று பதற்றத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில்தான் மீண்டும் பளுதூக்கல் பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதால், தனது முந்தைய சாதனைகளை முறியடிப்பது இம்முறை சவாலாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், போட்டியில் தன்னால் முடிந்த மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தேசிய மட்டத்துக்குத் திரும்பும் ஆஷிகா விஜயபாஸ்கரின் இந்த மீள்வருகை, அவரது விளையாட்டுப் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான கட்டமாக அமைந்துள்ளது.
19 தேசிய சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஆஷிகா விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட இலக்கு என்னவாக இருக்கும் என்பதை அறிய விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

















