யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டி வசூலிப்பு , பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் வசிக்கும் வன்முறை கும்பலை சேர்ந்த குறித்த 06 பேரில் இருவருக்கு நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையிலையே கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்.நகரை அண்டிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குழுவாக இயங்கி வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகவும் , அடாவடியாக மீற்றர் வட்டி வசூலிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் , எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ ஆர் முறைமைகளை மீறி , ஊழியர்களை அச்சுறுத்தி தமது மோட்டார் சைக்கிள் , கார் என்பவற்றுக்கு எரிபொருள் நிரப்பி செல்வதாகவும் பொலிஸாருக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்துள்ளன.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் குறித்த இளைஞர் கும்பலை சேர்ந்த 06 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் இருவருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளை நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காததால் , நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 06 நபர்களையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்
அதேவேளை குறித்த கும்பலின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட 09 பேர் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடந்த மாதம் பெருந்தொகை பணத்துடன் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


















