இலங்கையில் முதன்முறையாக, கொழும்பிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையில் (Kings Hospital Colombo) இரு நோயாளிகளுக்கு ரோபோட்டிக் தொலைதூர அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2026 ஒக்டோபர் 21ஆம் திகதி நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சைகளின்போது, மருத்துவ நிபுணர்களான பேராசிரியர் ஸ்ரீநாத் சந்திரசேகர மற்றும் பேராசிரியர் பவந்த கமகே ஆகியோர் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து 3,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தொலைவில் இருந்து அறுவைச் சிகிச்சைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதிவேகத் தொடர்பாடல் வலையமைப்புடன் இணைக்கப்பட்ட ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சைத் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரு அறுவைச் சிகிச்சைகளும் தொலைதூரத்தில் இருந்தே நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பில் நோயாளிகளுக்கு அருகில் இருந்த மருத்துவ நிபுணர்கள் அவசரத் தலையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனை இலங்கையின் மருத்துவத் துறையில் புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளதாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் நோயாளிகள், தங்கள் பகுதிகளிலுள்ள வசதிபெற்ற மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறுவதற்கும், வெளிநாட்டு நிபுணர்களின் மருத்துவ அறிவைப் பயன்படுத்துவதற்கும் இத்தொழில்நுட்பம் வழிவகுக்கக்கூடும்.
எனினும், இத்தொழில்நுட்பத்தைப் பரவலாக நடைமுறைப்படுத்துவதற்கு நம்பகமான தொடர்பாடல் வசதிகள், நவீன மருத்துவ உபகரணங்கள், பயிற்சிபெற்ற மருத்துவக் குழுக்கள் மற்றும் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


















