செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ வெளியிட்ட இடைக்கால அறிக்கை, இலங்கை அரசையும் இராணுவத்தையும் காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சனி குற்றம் சாட்டியுள்ளார்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் வெளியான இடைக்கால அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், பேரினவாதத்தின் கைக்கூலியாகச் செயற்பட்டு பேராசிரியர் ராஜ் சோமதேவ இந்த 170 பக்க அறிக்கையை தயாரித்துள்ளார் என்றார்.
செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்திருக்கலாம் என அவர் கூறியிருப்பது இலங்கை அரசையும் இராணுவத்தையும் திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகும் என்றும் அவர் சாடினார்.
இந்து முறைப்படி தகனம் செய்யப்படும் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், ஆடைகள் இன்றி 2 முதல் 3 அடி ஆழக் குழிகளில் மனித உடல்கள் குவியல் குவியலாக புதைக்கப்பட்டிருப்பதை இயற்கை மரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரச சார்பற்ற நிறுவனம் வழங்கிய புத்தகப் பையுடன் சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டமை மற்றும் எலும்புகள் முறிக்கப்பட்டு பிணைக்கப்பட்டிருந்தமை போன்ற ஆதாரங்கள் வெளிவந்த நிலையிலும், ராஜ் சோமதேவ அது குறித்து மௌனம் காப்பதாக தெரிவித்தார்.
யுத்த காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த செம்மணி சூனியப் பகுதியை தனது அறிக்கையில் குறிப்பிடாமல் இராணுவத்தைக் காப்பாற்ற அவர் முயன்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளையே மேற்கொண்டுள்ளன என்றும், 1996 ஆம் ஆண்டின் அடையாளமாக வெளிவந்த செம்மணியில் தற்போது சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசின் கீழ் இடம்பெறும் எந்தவொரு விசாரணையும் உண்மையையோ நீதியையோ தராது என்பதால் தான் ஆரம்பம் முதலே சர்வதேச விசாரணையைக் கோரியதாக அவர் நினைவுபடுத்தினார்.
எனவே, செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் நேரடியாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நாடுகளும் தூதரகங்களும் உரிய அழுத்தங்களை வழங்க வேண்டும் என லிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சனி வலியுறுத்தினார்.


















