வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைக்கால தரவுகளுக்கு அமைய, இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 105,295 ஆகும்.
மேலும், டெங்கு நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 54,783 ஆகும்.
அத்துடன், மத்திய மாகாணத்தில் 10,549 நோயாளர்களும், சபரகமுவ மாகாணத்தில் 8,629 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் பரிசீலிக்கும் போது அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர்.
இதனிடையே, ஆண்டின் கடந்த காலப்பகுதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த மாதத்தில் மட்டும் 29,964 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் ஒக்டோபர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,575 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நிலவும் மழை உடனான வானிலை காரணமாக டெங்கு கொசுக்கள் பெருகும் இடங்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், தமது வீடுகளையும் சுற்றுப்புற சூழலையும் தூய்மையாக வைத்துக்கொண்டு கொசுக்கள் பெருகுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொள்கின்றனர்.


















