
6 கோடியே 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் (60,265,000) பெறுமதியான போதைப்பொருள் தொகுதி ஒன்று வான்வழி தபால் பொதிகள் (Air Mail) மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தாய்லாந்து, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலி முகவரிகளுக்கு, குஷ் (Kush), ஹஷீஷ் (Hashish), கொக்கைன் (Cocaine) மற்றும் எக்ஸ்டசி (Ecstasy) ஆகிய போதைப்பொருட்கள் 9 பொதிகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தன.
இந்த பொதிகளைப் பெற்றுக்கொள்ள எவரும் வராததால், அந்த முகவரிகள் குறித்து ஆராய்ந்த போது அவை போலி முகவரிகள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, நேற்று (28) பிற்பகல் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய தபால் பரிமாற்றகத்தின் தபால் துறை அதிகாரிகளின் முன்னிலையில் அந்த பொதிகள் திறக்கப்பட்டன.
இவ்வாறு சுங்கத்துறையினரால் பொறுப்பேற்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொகுதி, மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


















