பெண்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும்; பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் நாடு முழுவதிலுமுள்ள சமூகங்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ( 27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத் துறை என்பது வெறும் பொருளாதார நடவடிக்கைக்கு அப்பாற்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அது கலாசாரங்களுக்கு இடையிலான பாலமாகவும், சர்வதேசத் தொடர்புகளுக்கான தளமாகவும், ஆயிரக்கணக்கான இலங்கைக் குடும்பங்களுக்கான வாய்ப்புகளின் ஊற்றாகவும் விளங்குகிறது என்றார்.
இலங்கை கட்டியெழுப்ப விரும்பும் சுற்றுலாத் துறையானது தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; உள்ளூர் வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்; இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும்; பெண்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும்; பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் நாடு முழுவதிலுமுள்ள சமூகங்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2030ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு சுற்றுலாத் துறைக்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள இலட்சிய இலக்குகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த எதிர்பார்ப்புகளை அடைவதற்கு உட்கட்டமைப்பு மேம்பாடும் முதலீடுகளும் மட்டுமன்றி, மேலும் பல விடயங்களும் தேவைப்படும் என வலியுறுத்தினார்.
இந்தத்துறையில் நிலையான வளர்ச்சியை எட்டுவதற்கு உயர் திறன் கொண்ட பணியாளர் படை, வலுவான நிறுவனங்கள், புதுமையான சிந்தனை, சிறப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இன்றியமையாதவை என்றும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாத் துறையில் பெண்களின் பங்கேற்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியில் பெண்கள் பங்களிப்பதற்கும் அதன் பயன்களைப் பெறுவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

















