காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கும், மக்களின் வாழ்வாதாரப் பாதிப்புகளுக்கும் தீர்வுகாணும் வகையில், இரு பகுதிகளிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு 177,665,000 ரூபா நிதி யாழ் மாநகர சபையால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கான நிதியைத் திரண்ட நிதியிலிருந்து விடுவிப்பதற்கு நிதிக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், காக்கைதீவு மேற்கு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான திட்ட முன்மொழிவும் தயாரிக்கப்பட்டு அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
குறித்த நெடு நாள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் கல்லுண்டாய் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை ஹைட்ராலிக் எக்ஸ்கவேட்டர் மற்றும் டோசர் இயந்திரங்களின் உதவியுடன் அகற்றி வகைப்படுத்துதல், அதற்கான போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகள், சிசிடிவி கண்காணிப்புக் கமராக்கள் பொருத்துதல், 50 வாட் COB மின்விளக்குகள் பொருத்துதல், நீர் இணைப்புகளை வழங்குதல் மற்றும் மின்சார வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், காக்கைதீவில் நீர் இணைப்புகளைச் சீரமைத்தல், மின்விளக்குகள் பொருத்துதல் மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட பல்நோக்கு ஸ்மார்ட் மின்கம்பங்களை நிறுவுதல் போன்ற பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கமைய காக்கைதீவில் இரண்டு ஸ்மார்ட் மின்கம்பங்களும், கல்லுண்டாயில் ஆறு ஸ்மார்ட் மின்கம்பங்களும் அமைக்கப்படவுள்ளன.
குறிப்பாக, காக்கைதீவு மேற்கு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான திட்டமும் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
இதேவேளை, குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி, ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் அப்பகுதி மக்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அடையாளப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த, மக்களின் போராட்டத்தை ஈ.பி.டி.பி தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சாட்டி, மாநகரசபையின் ஆட்சியாளர்கள் குறிப்பாக ஒருசில உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அவதூறுகளைச் சுமத்தி பிரச்சினையைத் திசைதிருப்ப முயன்றதாகவும் அப்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ஆனாலும் இவற்றை எல்லாம் தாண்டி, காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு தீர்வுக்கான வழி திறக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் அடிப்படைச் சுகாதாரப் பிரச்சினைகளை அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பால் அணுக வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

















