கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து மாநகர முதல்வர் விராய் கேலி பல்தசார் விளக்கம் அளித்துள்ளார்.
”கொழும்பு நகரின் வடிகால் அமைப்பு பல வருடங்களாகச் சுமார் 30 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியை மட்டுமே தாங்கும் வகையிலேயே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், நேற்று திடீரென 129 மில்லிமீற்றர் அளவிலான அசாதாரணமான பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.
நகர மக்கள் நலனுக்காக எப்போதும் செயற்படும் நிறுவனம் என்ற வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு எங்களால் முடிந்த முயற்சியைச் செய்து வருகிறோம்.
கொழும்பு மாநகரசபை, தாழ்நில அபிவிருத்தி அதிகாரசபை, பொலிஸார், முப்படையினர் மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து தூய்மைப்படுத்தும் மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
சுமார் 30 முதல் 50 மி.மீ மழையைத் தாங்கும் திறன் கொண்ட சில வடிகால்கள் மேம்படுத்தப்பட்டு 100 மி.மீ வரை தாங்கும் வகையில் மாற்றப்பட்டிருந்தாலும், 129 மி.மீ என்பது மிகக் குறுகிய காலத்தில் பெய்த மிகப்பெரிய மழைவீழ்ச்சியாகும்.
இது எதிர்காலத்தில் நாம் தீர்க்க வேண்டிய ஒரு நீண்டகாலக் கட்டமைப்புப் பிரச்சினையாகும். எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைத் தவிர்ப்பதற்காக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம்.
இன்றைய தினத்தில் எமது முன்னுரிமை குறுகிய காலத் திட்டங்களைச் செயற்படுத்துவதிலேயே உள்ளது.
சமூக வலைத்தளங்களில் தமக்கு எதிராக எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், மக்களின் துயரங்களையும் வேதனைகளையும் நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம் என்றும், அதற்காகப் பதிலளிக்கக்கூடிய பொறுப்புள்ள ஒரு நிறுவனமாகவே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.


















