நாட்டில், சுகாதாரத்துறையில் 4700 க்கும் அதிகமான ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, விசேட மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளிலேயே இந்த வெற்றிடங்கள் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர்,இதனைத் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிய மருத்துவமனைப் பிரிவுகள் மற்றும் விசேட மருத்துவ சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், தற்போதைய ஆளணித் தேவை அதிகமாகக் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு, புதிய ஆளணித் திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான முன்மொழிவு உரிய திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதி எதிர்வரும் டிசம்பர் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், 2027 முதல் 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 7 000 மருத்துவர்கள் மேலதிகமாகத் தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விசேட மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில், அவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மயக்க மருந்து மருத்துவத்துறையில் விசேட மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குச் சென்ற மருத்துவர்களில் கணிசமானோர் மீண்டும் நாடு திரும்பாதமையே ,இதற்கான காரணங்களில் ஒன்றெனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.


















