சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற MasterChef நிகழ்ச்சியின் முதலாவது இலங்கை நிகழ்வானது இன்று கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது. நிகழ்ச்சி உரிமைகளை வழங்குவதில் பாரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற Banijay Entertainment என்பதன் சர்வதேச விநியோகப் பிரிவான Banijay Rights உரிமையாண்மையின் கீழ் நாட்டில் சமையல் கலையில் பேரார்வத்தைத் தூண்டி, உள்நாட்டு திறமைசாலிகள் சர்வதேச மேடையில் பிரகாசிப்பதற்கு வாய்ப்பை வழங்கவுள்ளது.
Reality TV Productions மற்றும் Nilendra Deshapriya Productions ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து படைக்கும் MasterChef Sri Lanka விமரிசையான வெளியீட்டு நிகழ்வில் புகழ்பூத்த நட்சத்திரங்கள் அடங்கிய நடுவர் அணியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நட்சத்திர சமையல் கலை வல்லுனர், உணவக உரிமையாளர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் பீட்டர் குருவிட்ட அவர்களின் தலைமையில், MasterChef Australia நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான சவிந்திரி (சௌவ்) பெரேரா, இலங்கையின் உயர் தர உணவக மேதை றொஹான் பெர்னாண்டோபுள்ளே, மற்றும் அனுபவம்மிக்க சமையல் கலை வல்லுனர் கபில ஜெயசிங்க ஆகியோர் நடுவர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உலகினை ஆட்கொண்டுள்ள இந்த நிகழ்ச்சி, தற்போது சர்வதேச அளவில் 71வது நாட்டிலும் அறிமுகமாகியுள்ளதுடன், கின்னஸ் உலக சாதனைப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Banijay Rights ன் ஆசியாவுக்கான விற்பனைத் துறையின் நிறைவேற்று துணைத் தலைவர் ரஷ்மி பாஜ்பாய் அவர்களின் முயற்சியால் இந்த சமீபத்தைய அறிமுகம் சாத்தியமாகியுள்ளது.
“உலகளாவில் பிரசித்தி பெற்ற இந்நிகழ்வை, அனைவரையும் ஈர்க்கின்ற புதிய வடிவத்துடன் தற்போது இலங்கைக்கு கொண்டு வந்து, 71வது நாட்டிலும் அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்,” என்று அவர் குறிப்பிட்டார். “இந்நாட்டில் செழுமைமிக்க சமையல் கலை பாரம்பரியம் காணப்படும் நிலையில், இந்த செப்டெம்பரில் எமது தொலைக்காட்சி கூட்டாளர்களின் துணையுடன் அவற்றை மிகவும் நேர்த்தியாக அனைவருக்கும் காண்பிக்கவுள்ளோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இச்செயற்திட்டத்தின் தலைவரும், Reality TV Productions நிறுவனத்தின் இணை ஸ்தாபகருமான அஜித் கம்லத் அவர்கள் இந்த அறிமுக நிகழ்வில் உரையாற்றுகையில், “MasterChef Sri Lanka நிகழ்ச்சி, உலகத்தரம் வாய்ந்த நிகழ்ச்சித் தயாரிப்பு, உள்நாட்டு சமையல் கலையின் மகத்துவம், மற்றும் இலங்கை உணவுத் துறை மீதான சர்வதேசத்தின் கவனம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு Reality TV Productions பெருந்தொகையை முதலீடு செய்துள்ளதுடன், இதன் மூலமாக இலங்கையில் ரசிகர்களுக்கு சர்வதேசரீதியாக பிரபலமான நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எம்மால் அறிமுகம் செய்ய முடியும்,” என்று குறிப்பிட்டார்.
MasterChef Sri Lanka இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான நிலேந்திர தேஷப்பிரிய அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “சர்வதேச தராதரங்களை முழுமையாகப் பின்பற்றி, அனுமதி உரிமம் பெற்ற MasterChef நிகழ்ச்சியை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கொண்டு வர முடிந்துள்ளதையிட்டு நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிகழ்ச்சி வெறுமனே தொழில்சார் சமையல் கலைஞர்கள் தொடர்புபட்ட ஒன்றல்ல, நாடெங்கிலும் உள்ள மக்களுக்கான அன்றாட வழக்கம் தொடர்புபட்டது.
அவர்கள் தமது சமையல் கலை திறமைகளை காண்பிக்கும் அதேசமயம், குடும்பங்கள் மற்றும் பிராந்தியங்களிலிருந்து தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வருகின்ற பாரம்பரியமான சமையல் செய்முறைகளை மீண்டும் தோற்றுவிப்பதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.
நிகழ்ச்சியில் போட்டியிடவுள்ள 11 ஆண் மற்றும் 11 பெண் போட்டியாளர்களைப் பொறுத்தவரையில் இது வெறுமனே மற்றுமொரு சமையல் கலை நிகழ்ச்சியாக அல்லாமல், அவர்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல ஒரு வாய்ப்பாக மாற்றவுள்ளது. நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனும் போது பாடல் மற்றும் நடனம் தொடர்பான நிகழ்ச்சிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாட்டில், முற்றிலும் புதிய மற்றும் மாற்றம் நிறைந்த அனுபவத்தை MasterChef கொண்டுவரவுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
இத்தருணத்தில் கருத்து தெரிவித்த பீட்டர் குருவிட்ட அவர்கள், “இலங்கையின் மிகச் சிறந்த சுவை வடிவங்கள், நுட்பங்கள், மற்றும் எமது வளமான சமையல் கலை பாரம்பரியத்தை உலகிற்கு காண்பிப்பதே MasterChef Sri Lanka நிகழ்ச்சி,” என குறிப்பிட்டார்.
சவிந்திரி (சௌவ்) பெரேரா அவர்கள் தனது பயணம் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கையில், “MasterChef Australia நிகழ்ச்சியின் நான் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் பின்னர் எமது அடுத்த சமையல் விற்பன்னரை வெளிக்கொண்டு வந்து, வழிகாட்டுவதற்கு உதவுவதற்கு மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை ஆழமான அர்த்தம் நிறைந்த ஒன்றாக அமைந்துள்ளது. இது வெறுமனே வெற்றிப்பட்டம் என்பதற்கும் அப்பாற்பட்டது, இது உணவின் மூலமாக எமது அடையாளத்தைக் கொண்டாடும் தருணமாகும்,” என்று குறிப்பிட்டார்.
முதலாவது பருவகாலத்திற்கான நிகழ்ச்சி படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன், 25 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சி, சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையில் 2025 செப்டெம்பர் முதல் ஒளிபரப்பப்படவுள்ளது. இதில் வெற்றியாளராக மாறுபவர் ரூபா 3 மில்லியன் பணப்பரிசு, ஆடம்பர வாகனம், மற்றும் மதிப்பு மிக்க பட்டத்தைப் பெற்றுக்கொள்வதுடன், இலங்கையின் முதலாவது பருவகாலத்திற்கான MasterChef என்ற பெருமையையும் சம்பாதிக்கவுள்ளார்.
இதில் பங்குபற்றும் ஆவல் உள்ள போட்டியாளர்கள் masterchefsl.com மூலமாகவோ அல்லது +94 7875 2870 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தின் மூலமாகவோ தற்போது இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், இதன் பின்னர் இலங்கையின் அடுத்த சமையல் கலை விற்பன்னருக்கான தேடல் ஆரம்பிக்கப்படும். விண்ணப்பிப்பவர்களின் வயதெல்லை 18-55 ஆக இருக்க வேண்டும் என்பதுடன், இதை விடவும் தகைமைக்கான மேலதிக நிபந்தனைகளுக்கும் இது உட்படும்.
இது தொடர்பான ஆர்வம் அதிகரித்தும், நுழைவு விண்ணப்பங்கள் பெரும் எண்ணிக்கையில் கிடைக்கப்பெற்றும் வருகின்ற நிலையில், இந்த ஆண்டில் மிகவும் பிரபலமாக பேசப்படவுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக MasterChef Sri Lanka மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது. வீடுகளில் அன்றாடம் சமையலை மேற்கொள்பவர்கள் தமது சமையல் கலை சார்ந்த கனவுகளை நனவாக்கி, தமது பேரார்வத்தையும், உத்வேகத்தையும் தேசத்தின் பெருமையாக மாற்றிக் கொள்வதற்கான வலுவான மேடையை இந்நிகழ்ச்சி வழங்குகின்றது.


