போதிய ஆர்வமின்மை காரணமாக கதைகளை கவனமாக தெரிவு செய்து குறைவாக நடித்து வரும் நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, கருடா ராம் ,ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார்.
ரொமான்டிக் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை பி வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பாபு விஜய் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஒவ்வொருவருக்கும் இந்த பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்து வெளிப்படுத்தும் ஆச்சரியங்கள் ஏராளம்.
அந்த வகையில் ஒருவனது வாழ்க்கையில் அடுத்தடுத்து நடைபெறும் ஆனந்தமும், அதிர்வுகளும் தான் இப்படத்தின் மையப்புள்ளி. எம்முடைய தேசத்தில் தொடர்ந்து நிகழ்கின்ற எதிர்காலத்தில் தீவிரமாக மாறவிருக்கும் மிகப்பெரும் ஆபத்தினை பற்றி இந்தப் படத்தில் அழுத்தமாக விவரித்திருக்கிறோம் ”என்றார்.
‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் காவல் நிலையம் ஒன்றில் கதையின் நாயகனை காவலர்கள் உடலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும், ‘காவலர்கள் தாக்கினால் ‘நாம் இறுதிவரை உறுதியுடன் போராடுவோம்” என கவனம் ஈர்க்கும் வசனங்களை இணைத்திருப்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
