இன்றைய சூழலில் எம்மில் பலரும் உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறையில் கட்டாய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டு, சர்க்கரை நோயாளிகளாக மாறி வருகிறார்கள்.
இதில் இளம் வயதினரும் அதிகளவில் தொடக்க நிலை சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதே தருணத்தில் சர்க்கரை நோய் – அலோபதி மருத்துவ சிகிச்சை- மாற்று மருத்துவ சிகிச்சை என பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இதனால் மக்கள் சர்க்கரை நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக.. தங்களுக்கு சௌகரியமான குழப்பமான நிலையையே மேற்கொள்கிறார்கள்.
இதனால் தொடக்க நிலையில் அறிகுறியை ஏற்படுத்தாத சர்க்கரை நோய்க்கு அவர்கள் எளிதில் ஆளாகிறார்கள். அதன் பிறகு சர்க்கரை நோய் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு.. அவர்கள் ஆயுள் முழுவதும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
இந்த தருணத்தில் ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
நீங்கள் எந்த வயதை சார்ந்தவராக இருந்தாலும்… எந்த பாலினத்தை சார்ந்தவராக இருந்தாலும்… சர்க்கரை நோயின் தொடக்க நிலை பாதிப்பை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்குரிய பிரத்யேக பரிசோதனை மூலம் உங்களுக்கு இரத்த சர்க்கரையின் அளவில் குறைபாடு இருந்தால்… தொடக்கநிலை சர்க்கரை குறைபாடு என உறுதிப்படுத்தப்பட்டால்.. அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் அதற்குரிய சிகிச்சையை உடனடியாகவும், முழுமையாகவும் தொடங்குங்கள்.
ஆரம்ப நிலை சர்க்கரை குறைபாட்டிற்கான சிகிச்சையில் மருந்தியல் சிகிச்சையை விட, உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து பரிசோதனைகள் மூலம் ஆரம்ப கட்ட சர்க்கரை குறைபாட்டினை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் .. சிகிச்சையை தொடர்ந்து பத்து ஆண்டுகள் வரை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ஆயுள் முழுவதும் ரத்த சர்க்கரையின் அளவை சிகிச்சையின் மூலம் அல்லது ஒருங்கிணைந்த சிகிச்சையின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள இயலும்.