இன்றைய திகதியில் திருமண வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் அவர்களுடைய பெற்றோர்கள் முயற்சியில் திருமணம் செய்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். சிலர் காதலித்து திருமணம் செய்து கொள்வதிலும் ஆர்வமுடையவராக இருப்பார்கள்.
வேறு சிலர் திருமணத்திற்குப் பிறகு தங்களுடைய மாங்கல்யத்திற்கு எந்த தோஷமும் ஏற்படக்கூடாது என கவலை கொள்வார்கள். இவர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சூட்சமமான பரிகாரத்தை எம்முடைய முன்னோர்கள் அருளி இருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : குங்கும சிமிழ்.
ஒவ்வொருவரும் தங்களுடைய பொருளாதார ஆற்றலுக்கு ஏற்றவாறு வெள்ளி மற்றும் ஏனைய உலோகத்தால் தயாரிக்கப்பட்ட குங்குமச்சிமிழை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வெள்ளிக் கிழமையை தெரிவு செய்து, அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று, அம்பாளை வணங்கிய பிறகு அந்த ஆலயத்திற்கு வருகை தரும் சுமங்கலி பெண்களுக்கும், இளம் பெண்களுக்கும், குங்குமச்சிமிழை தானமாக வழங்குங்கள்.
இதன் எண்ணிக்கை 48 ஐ கடந்தவுடன் உங்களுடைய கோரிக்கையை இந்த பிரபஞ்சம் மகாலட்சுமியின் ஆசியுடன் கனிவாக பரிசீலித்து உங்களுக்கு இந்த பிறவியில் கிடைக்க வேண்டிய திருமணம் தொடர்பான பலன்களை வழங்கும்.
குங்கும சிமிழ் என்பது மகா லட்சுமி வாசம் செய்யும் மங்களகரமான பொருள் என்பதாலும் மகாலட்சுமியின் பரிபூரண ஆசி கிடைக்கும். அதே தருணத்தில் எம்முடைய வீட்டிற்கு வருகை தரும் உறவினர்களின் பெண்மணிகளுக்கும், விருந்தினர்களுக்கும் குங்குமச்சிமிழ் தானமாக வழங்கும் போது உங்களுடைய வீட்டில் திருமணம் தொடர்பான சுப நிகழ்வுக்கான பேச்சுவார்த்தை சாதகமான பலனை உண்டாக்கும்.
அதே தருணத்தில் குங்குமச்சிமிழில் ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்காத இயற்கையான மஞ்சள் குங்குமத்தை இடம்பெற செய்திருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.