-போராட்டத்திற்கு தயாராகும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்-
நாட்டின் இலவச சுகாதார அமைப்பு கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று எச்சரித்துள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், 2026 வரவு – செலவுத் திட்டம், மனித வளங்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட நீண்டகால சவால்களை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர மத்திய குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில்:-
சுகாதார அமைப்பு ஒரு ‘முக்கியமான கட்டத்தை’ எட்டியுள்ளது என்றும், வசதிகள் மற்றும் வளங்கள் இல்லாததால் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியாது சிரமங்களை எதிர்கொள்கின்றன.
பொதுச் சுகாதார சேவையை வலுப்படுத்த ஒரு நிலையான திட்டத்தின் அவசரத் தேவை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மூத்த திறைசேரி அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்ததாகவும், ஆனால் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை.
பொருளாதார மீட்சி மற்றும் மேம்பட்ட நிதி ஸ்திரத்தன்மை குறித்து அரசாங்கம் கூறினாலும், 2026 பாதீடு பொது சுகாதார அமைப்பைப் பாதுகாக்க அல்லது வலுப்படுத்த எந்தவொரு தெளிவான உத்தியையும் முன்வைக்கத் தவறிவிட்டது.
மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு அதிக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தாலும், தரமான மருந்துகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கான உறுதியான திட்டம் எதுவும் இல்லை.
கொள்முதல் செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் தேசிய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை நிறுவுதல் போன்ற முக்கியமான பகுதிகளை பாதீடு புறக்கணித்துள்ளது.
நாட்டிற்குள் மருத்துவ நிபுணர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கோ அல்லது அரச சேவையில் எஞ்சியிருப்பவர்களை ஊக்குவிப்பதற்கோ எந்தத் திட்டங்களும் இதில் இல்லை.
நெருக்கடி காலத்தில் தொடர்ந்து சேவை செய்த மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைப் புறக்கணிப்பது ஒரு வரலாற்றுத் தவறு. மருத்துவ பணியாளர்களிடையே அதிகரித்து வரும் விரக்தி மருத்துவமனைகளில் நெருக்கடியை மோசமாக்கும்.
அரசாங்கம் ஒரு வாரத்திற்குள் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வுகளை வழங்கத் தவறினால், மாவட்ட மற்றும் மாகாண மட்ட போராட்டப் பிரச்சாரங்களை ஆரம்பித்து, அதன் பின்னர் அதன் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்கவும், நோயாளிகளின் வாழ்க்கை உரிமையை உறுதிப்படுத்தவும் ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


















