மலையக அரசியல்த் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 ஆவது சிரார்த்த தினம் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், கட்சியின் பிரதித் தலைவர்களான கணபதி கனராஜ், அனுசியா சிவராஜா, பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, உப தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.
சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக செயற்பட்டார். முக்கிய பல அமைச்சுகளை வகித்துள்ளார். இலங்கையில் சிறந்ததொரு தேசியத் தலைவராகவும் செயற்பட்டார்.


















