வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கா கடத்தியுள்ள செயல் ‘சர்வதேச கடற்கொள்ளை’ என வர்ணித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அதனை வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, முன்னதாக ஹெய்ட்டி ஜனாதிபதி ஜீன் பெர்ட்ரான்ட் அரிஸ்டைட் கடத்தப்பட்டதையும், கொங்கோ பிரதமர் பேட்ரிஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டதையும் நினைவுபடுத்துகின்றது.
இதன் மூலம் அமெரிக்கா ஒரு சர்வதேச பயங்கரவாத நாடு என்பதை மீண்டும் உலகுக்கு நிரூபித்துள்ளது.
வெனிசுவேலாவிலுள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்குடனேயே இந்த ஆக்கிரமிப்பு அரங்கேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கா சொல்லும் காரணங்கள் அனைத்தும் வெறும் கண்துடைப்பு. ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகவே இந்தத் தலையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெனிசுவேலாவின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், வெளிநாட்டுத் தலையீடுகளை எதிர்க்கவும் அந்த நாட்டு மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வழங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


















