நாட்டில் நடைபெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்குப் பணியாமல் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நாங்கள் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தியதால், எங்களால் இந்த நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடிந்தது.
பங்களாதேஷிலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அங்கு வீதிக்கு இறங்கியவர்கள் மீது இறுதியில் அரசாங்கம் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி ஏற்பட்டது. இலங்கையில் ஏற்பட்டது போன்ற கடுமையான பிரச்சினைகள் அவர்களுக்கு இல்லை. நேபாளத்தில் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தியதாலேயே பிரச்சினை ஏற்பட்டது.
ஆனால் எங்களுக்கு இருந்தவை இவற்றைவிடக் கடுமையான பிரச்சினைகள். இருப்பினும் நாங்கள் ஜனநாயகத்தின் ஊடாகவே அந்த போராட்டங்களை பார்த்தோம். ஜனநாயக ரீதியில் அவற்றை கட்டுப்படுத்த முடிந்தது.
போராட்டம் ஒடுக்கப்பட்டது என்று பிபிசி, அல்-ஜசீரா என எல்லா இடங்களிலும் கூறினார்கள். எவ்வளவு ஒடுக்கினார்கள் என்றால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்றேன்.
உலகிலேயே இப்படிப்பட்ட வெற்றிகரமான ஒடுக்குமுறை எங்கேயும் நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
பொருளாதாரத்தையும் சீர் செய்தோம். நாட்டில் கோரிக்கைகள் இருந்தன – கோல்பேஸ் போராட்டத்தில், நாடு முழுவதும் உரத்தைக் கொடுங்கள், உணவு கொடுங்கள், எரிபொருள் கொடுங்கள் என்று கேட்டார்கள்.
அந்த மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்தோம். ஜனநாயகத்தைப் பாதுகாக்கச் சொன்னார்கள், அதையும் செய்தோம். ஊழலை ஒழிக்கச் சொன்னார்கள். ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றினோம்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், ஆசியாவிலேயே பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றுதான் இலங்கை.
நாம் இதைப் போற்ற வேண்டும். இதைப் பாதுகாக்க வேண்டும். இதை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
இது எந்தவொரு அரசாங்கத்தினதும் கடமையாகும். அதைச் செய்ய முடியாவிட்டால், எங்களால் ஆட்சி செய்ய முடியும் என்று எந்தவொரு அரசாங்கமும் சொல்ல முடியாது என்றார்.


















