அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலான சிக்கல்களை மீளாய்வு செய்துவருவதாக கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதற்கு அவகாசம் வழங்குமாறும் கூறினார்.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற நிழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், அதன் பின்னர் அரச சேவையின் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
அரச ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்.
அதேவேளை, டித்வா அனர்த்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அந்த அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்காக திறைசேரியிலிருந்து 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக எவ்வித பணமும் கடனாகப் பெறப்படவில்லை, எவ்வித பணமும் அச்சிடப்படவில்லை. அச்சந்தர்ப்பத்தில் திறைசேரியின் கணக்கில் 120,000 கோடி ரூபாய் இருந்ததாகவும், எனவே, இந்த 50,000 கோடி ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
டித்வா அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என உலக வங்கி கணிப்பிட்டுள்ளது. இது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 4 வீதமாகும். அரசாங்கம் முன்னெடுத்த வலுவான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பிலிருந்து மீள முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


















