-நாமல் ராஜபக்ஷ அதிரடி-
தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளை மறைப்பதற்காக அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும், இத்தகைய சவால்களுக்குத் தமது கட்சி ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்லவில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள நிலையில், தற்போது தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள எதிர்க்கட்சியினரையும் மஹா சங்கத்தினரையும் இலக்கு வைத்து அடக்குமுறைகளை ஏவி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, கடந்த கால போராட்டங்களின் போது இடம்பெற்ற வன்முறைகளைத் தூண்டியவர்கள் இன்று அதிகாரத்தில் இருந்து கொண்டு, பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் விசாரணைகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மதிப்பதாகக் குறிப்பிட்ட அதேவேளை, சில அரசியல் தரப்பினர் ஊடகங்கள் வாயிலாகத் தனிப்பட்ட நபர்களைத் தண்டிக்கும் வகையில் கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணம் என்றார்.
ராஜபக்ஷர்களின் ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் இனவாதம் பின்பற்றப்படவில்லை என்றும், பௌத்த கலாசாரத்தைப் பாதுகாப்பது இனவாதம் ஆகாது என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.



















