-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்கும் மேலாக தண்டணை அனுபவிப்போரின் தண்டணைகளை தளர்த்துவது தொடர்பான ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கோழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 20 வருடங்களுக்கு மேலாக தண்டனையை அனுபவிப்போர் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் வகையிலேயே இந்த விடயங்கள் ஆராயப்படுகிறது.
இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 10 பேர் தொடர்ந்தும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.
இவர்களின் தண்டனைகளை ஆராய்ந்து, விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சிடம் கேட்கப்பட்டபோது,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாத்திரமே கைதுகள் இடம்பெற்றுள்ளதால், அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. எவரேனும் தனிநபர்கள் தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில்,
அவர்களின் தனிப்பட்ட தகவல்களை தம்மிடம் சமர்பிக்குமாறும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.


















