-அமைச்சர் சந்தன அபேரத்ன-
அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் தற்போதைய சீரற்ற காலநிலையிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களின் அறிவித்தல்கள் அனுப்படுகின்றமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மத்திய, ஊவா மாகாணம் உள்ளிட்ட தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்புகள் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் மும்மொழிக் கொள்ளையைப் பின்பற்றுமாறு அனைத்து திணைக்களங்கள் மற்றும் அரச அலுவலகங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், அலுவலகங்கள் அதனைப் பின்பற்றியிருக்கவில்லை என்றால் அது தொடர்பில் ஆராய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், இவ்விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் விடுத்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
அதற்கமைய இன்று முதல் அனைத்து அரச அலுவலகங்களிலும் வெளியிடப்படும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்பது தொடர்பில், தாம் உரிய பணிப்புரைகளை விடுப்பதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.


















