அரச தாதியர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு அரசாங்கம் இரண்டு வாரங்களில் தீர்வு வழங்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம் என அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
அரச சேவையில் 40ஆயிரத்துக்கும் அதிகமான தாதியர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றபோதும் சுகாதார அமைச்சரோ அரசாங்கமோ இதுதொடர்பில் கலந்துரையாடி தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதை காணக்கூடியதாக இல்லை.
தொடர்ந்து பதவி உயர்களை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன, ஆட்சேர்ப்புகள் தேவையான அளவு மேற்கொள்ளப்படுவதில்லை. இந்நிலையில் தற்போது வெளிநாடு செல்லும் விடுமுறையும் இரத்துச்செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்களுடன் மாத்திரம் கலந்துரையாடி சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்லும் போக்கையே காண்கிறோம்.
இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை பெற்றுக்கொள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்லவேண்டி இருக்கிறது.
அதனால் சுகாதார அமைச்சர் தயவுசெய்து கலந்துரையாடலுக்கு வந்து, தீர்க்க முடியுமான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும். முடியாத பிரச்சினைகள் தொடர்பில் காலம் எடுத்து தீர்த்து காண நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறு இல்லாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. அதேநேரம் தாதியர்கள் 3ஆயிரம் பேர்வரை இன்று வெளிநாடு சென்றுள்ளனர். மேலும் 1500பேர் தொழிலை விட்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு 20ஆயிரத்துக்கும் அதிகம் தாதியர் வெற்றிடம் காணப்படுகிறது. ஆனால் அரசாங்கம் புதிதாக இணைதை;துக்கொள்வதை தவிர்த்து வருகிறது.
அத்துடன் நாட்டில் 18 தாதியர் கல்லூரிகள் காணப்படுகின்றன. அந்த கல்லூரிகளில் கற்பிப்பதற்கு போதஹமானளவு பேராசிரியர்கள் இல்லை. அதனால் அந்த கல்லூரிகள் வீழ்ச்சியடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.
அதேநேரம் அரசாங்கம் வாக்குறுதி அளித்த தாதியர் பல்கலைக்கழகம் அமைக்கும் வேலைத்திட்டத்தையும் பிற்படுத்தி வருகிறது. தாதியர்களை உருவாக்குவதற்கு அரசாங்கத்திடம் எந்த நடவடிக்கையும் இல்லை – என்றார்.


















