அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச மருந்தக மட்டக்களப்பு கிளை நாளை வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது.
இது அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 67 ஆவது புதிய அரச மருந்தகக் கிளையாகும்.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்; நளிந்த ஜெயதிஸ்ஸவின் சிந்தனையின் அடிப்படையில், மக்களின் தேவைக்கேற்ப நாடு முழுவதும் அரச மருந்தகக் கிளைகளை நிறுவுவதற்கான சிறப்புத் திட்டத்துடன் இணைந்து இந்தப் புதிய மருந்தகக் கிளை தனது சேவையை வழங்கத் தயாராக உள்ளது.
இந்தக் கிளை அனுபவம் வாய்ந்த மருந்தாளர்களின் சேவைகளின் கீழ், நியாயமான விலையில் உயர்தர மருந்துகளை பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு உதவுகிறது. மேலும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு 5 வீத சிறப்பு தள்ளுபடியுடன் மருந்துகளை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.
நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தர ஆய்வகத்தில் நான்கு நிலைகளில் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் மருந்துகள் சந்தைக்கு அனுப்பப்படுவதால், பொதுமக்கள் நம்பிக்கையுடன் மருந்துகளைப் பெற முடியும்.
இலங்கை மக்களுக்கு உயர்தரமான, சிறந்த மருந்துகளை நியாயமான விலையில் வழங்குவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு, பேராசிரியர் சேனக பிபிலேவினால் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம், 54 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டு மக்களுக்கு தரமான மருந்துகளை வழங்கி வருகிறது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத் தலைவர் மனுஜ் சி. வீரசிங்க, நிர்வாக இயக்குநர் மேவன் சம்பத் சுபசிங்காராச்சி, அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபன அதிகாரிகள், மட்டக்களப்புப் பகுதியிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















