-முன்னிலை சோசலிஷ கட்சி எச்சரிக்கை-
இலங்கைக்கு கடந்த 10 நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல் எதுவும் வருகைதராததால், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பாரிய மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்;,
இந்த ஆண்டில் மின்சார உற்பத்திக்காக 25 நிலக்கரி கப்பல்களை விநியோகிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ட்ரைடென்ட் கெம்பர் எனும் இந்திய நிறுவனமானது இதுவரை 13 கப்பல்களை மாத்திரமே இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளது.
ஏப்ரல் மாத இறுதிக்குள் 25 நிலக்கரி கப்பல்களையும் தரையிறக்க வேண்டிய கட்டாயம் உள்ள போதிலும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு கப்பல் கூட நாட்டை வந்தடையவில்லை என்பது பாரிய சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.
ஏப்ரல் மாத இறுதியில் பஸ்நாயக்க கடற்பரப்பில் ஆரம்பமாகும் பருவக்காற்று நிலைமை காரணமாக நிலக்கரி இறக்கும் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் மொத்த விநியோகத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
பாராளுமன்றத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி திட்டமிடப்பட்ட எண்ணிக்கையை விட ஐந்து கப்பல்கள் குறைவாக வந்தாலும்
ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு இல்லையெனில் அதிக விலைக்கு டீசல் மூலம் இயங்கும் வெப்ப மின்நிலையங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும்.
குறித்த இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்காக விலைமனு கோரல் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறை நான்கு மாதங்கள் தாமதப்படுத்தப்பட்டமை அந்த நிறுவனத்திற்குப் பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட அவகாசமா என்ற கேள்வி எழுகிறது.
2025 செப்டம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்த விலைமனு கோரல் நடைமுறையை நவம்பர் வரை இழுத்தடித்தமை அந்த நிறுவனத்திற்கு பிணை முறிப் பணத்தைச் செலுத்த வழங்கப்பட்ட சலுகையாகும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் கொண்டு வரப்பட்ட நிலக்கரி தரம் குறைந்ததாக இருந்த போதிலும் குறித்த நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கம் அல்லது ஜனாதிபதி எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்கவில்லை.
சர்வதேச ரீதியில் நிலக்கரி போக்குவரத்துக்கான கப்பல் கட்டணங்கள் ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 11 டொலர்கள் வரை அதிகரித்துள்ள நிலையில் குறித்த நிறுவனம் தனது ஒப்பந்தத்தை மீறி விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலக முயற்சிக்கிறதா என்பது குறித்து
அரசாங்கம் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். இவ்வாறான முறைகேடுகளினால் ஏற்படும் நட்டத்தை மின்சாரக் கட்டண அதிகரிப்பு மூலம் மக்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சித்தால் அதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.


















