-ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து-
கடந்த 13 ஆம் திகதி பட்டப்பகலில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமையானது, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கின் மீதான பாரிய அச்சுறுத்தலாகும் என ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களுக்குள்ளேயே, முறையான விசாரணைகளின்றி இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றவாளியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என பொலிஸார் அறிவித்தமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு சட்டத்தரணிக்கும் பொலிஸ் அதிகாரிக்கும் இடையிலான தகராறில் பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கு ஆதரவாகச் செயற்பட்ட பின்னணியிலேயே இக்கொலைகள் இடம்பெற்றன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன கடந்த ஒரு வருடமாக மிக மோசமாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களிடமிருந்து நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதனால் நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளமைக்கும் இப்படுகொலைகளுக்கும் பொறுப்பேற்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சட்டமா அதிபர் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆலோசித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கீகாரத்துடன் ஒரு விசேட காவல்துறை குழுவை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் லக்ஸம்பேர்க் உடன்படிக்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையின் (9.4 பிரிவு) அம்சங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.


















