நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் சவால்கள் அதிகரிக்கும் போது, ஒரு நாடாக நாம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சர்வதேச சுகாதார நல கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சுகாதாரத் துறையில் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைத் துறைகளை வலுப்படுத்துவது முக்கியமான விடயமாகும். இலவச சுகாதாரமும் மனித வளமும் மனித உரிமைகளாகும். உயர்தர, வினைத்திறனான மற்றும் சிறந்த சேவைகளை வழங்கும் அரச நலன்புரித் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக சுகாதாரத் துறை இயங்கி வருகின்றது.
ஆகவே, இந்த சுகாதாரத் துறையை வலுப்படுத்தி, இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் துறையாக மாற்ற வேண்டும்.
ஒரு நாடாக, இன்று நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம். பல ஆபத்துகளும் சவால்களும் நம்மை நோக்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் உலக அமைதிக்காக பாடுபடுவதே நமது நாட்டின் கொள்கையாக இருக்க வேண்டும்.
நம்பிக்கை சீர்குலைந்து காணப்படுவதன் காரணமாக இன்று போர்ச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டின் தேசிய அபிலாiஷ, 220 இலட்சம் மக்களைப் பாதுகாப்பதாகும். அதற்கு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை நிலைநிறுத்தி, சமநிலையான முறையில் அமைதிக்கும் சமாதானத்துக்கும் அர்ப்பணித்த நாடாக நடந்து கொள்ள வேண்டும்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு ஏற்ப கொள்கையின் அடிப்படையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் சவால்கள் அதிகரிக்கும் போது, ஒரு நாடாக நாம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
நாட்டு மக்களின் மற்றும் தாய்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சர்வதேச மனித உரிமைக் கடமைகளை செயற்படுத்தும் இராஜதந்திர நடவடிக்கைகளையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
யார் என்ன கோரிக்கைகளை முன்வைத்தாலும், நாம் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு, சர்வதேச மனித உரிமைகள் சாசனம், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை நன்கு புரிந்துகொண்டு நமது இலக்குகளை அடைந்து கொள்ள வேண்டும்.
நமது நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் பாதகமான நிலைமைகளை தடுத்து மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இறையாண்மை, நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டை தொடர்ச்சியாக உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.


















