டிக்டொக் செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம் பயனாளர்களை பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை நோக்கித் திசை திருப்புவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் என்ற இலாப நோக்கற்ற கண்காணிப்புக் குழு நடத்திய புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத் தளங்களில் வயதுச் சரிபார்ப்பை கடுமையாக்க வேண்டும் என்ற அழுத்தம் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
ஒக்டோபர் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக குளோபல் விட்னஸ் நிறுவனம் ஏற்கனவே தேடல் வரலாறுகள் நீக்கப்பட்ட புதிய தொலைபேசிகளில் 13 வயதுடையவர்களைப் போல உருவகிக்கும் 7 புதிய டிக்டொக் கணக்குகளை இங்கிலாந்தில் உருவாக்கியது. டிக்டொக் கணக்கை ஆரம்பிக்க குறைந்தபட்ச வயதெல்லை 13 ஆகும்.
டிக்டொக் இன் ஆதரவுப் பக்கத்தின்படி, ‘கட்டுப்படுத்தப்பட்ட பயன்முறை’ என்பது ‘பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள்’ உட்பட ‘அனைவருக்கும் வசதியாக இருக்காது’ என்று கருதப்படும் உள்ளடக்கத்தை மட்டுப்படுத்துகிறது. இருப்பினும் 13 வயதுடையவர்கள் என்று குறிப்பிட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பயன்முறையைப் பயன்படுத்தியும் உலாவிய பயனாளர்களுக்கு டிக்டொக் இன் தேடல் பரிந்துரைகள் ‘அதிக பாலியல் தன்மையுடன்’ இருந்ததாக குளோபல் விட்னஸ் தெரிவித்துள்ளது.
குளோபல் விட்னஸ் உருவாக்கிய சோதனை கணக்குகளில் மூன்றிற்கு பயனர் முதல் முறையாக தேடல் பட்டியை கிளிக் செய்தபோதே பாலியல் ரீதியான தேடல் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மேலும் கணக்கைத் தொடங்கிய பிறகு சில கிளிக்குகளில் அனைத்து ஏழு சோதனை பயனர்களுக்கும் ஆபாச உள்ளடக்கத்தை டிக்டொக் மேற்பரப்பிற்குக் கொண்டு வந்ததாக அறிக்கை கூறுகிறது.
‘டிக்டொக் ஆபாச உள்ளடக்கத்தை சிறுவர்களுக்குக் காட்டுகிறது என்பது மட்டுமல்ல எங்கள் வாதம். டிக்டொக் -இன் தேடல் வழிமுறைகள் இளையவர்களை ஆபாச உள்ளடக்கத்தை நோக்கி செயலூக்கத்துடன் தள்ளுகின்றன’ என்று குளோபல் விட்னஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
டிக்டொக் -இன் சமூக வழிகாட்டுதல்கள் நிர்வாணம் பாலியல் செயல்பாடு மற்றும் பாலியல் சேவைகள் கொண்ட உள்ளடக்கத்தையும் இளையவர்களை உள்ளடக்கிய பாலியல் ரீதியான ஆலோசனைகள் அல்லது கணிசமான உடல் வெளிப்பாடு கொண்ட உள்ளடக்கத்தையும் தடை செய்கின்றன.
இந்த அறிக்கை குறித்து டிக்டொக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது ‘இந்த கூற்றுகள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், உடனடியாக அவற்றை விசாரணை செய்யவும், எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை அகற்றவும், எங்கள் தேடல் பரிந்துரை அம்சத்தில் மேம்பாடுகளை ஆரம்பிக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் டிக்டொக் இளம் பருவத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அம்சங்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிக்டொக் வயது கண்டறிதல் முறைகளைப் பயன்படுத்தி உலகளவில் மாதந்தோறும் சுமார் 6 மில்லியன் வயது குறைந்த கணக்குகளை அகற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.


















