நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்கள் நேற்று முன்தினம் இரவு உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு ஆலயத்தின் பின் கதவு வழியாக உள்நுழைந்த திருடர்கள் 6 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடியுள்ளனர்.
இதில் மூன்று உண்டியல்களை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு ஆலயத்தின் பின்புறத்தில் நீரோட்டம் கொண்ட கங்கையில் வீசி சென்றுள்ளனர்.அத்துடன் ஆலயத்தில் உள்நுழைந்த திருடர்கள் தங்களது உருவங்கள் பதிவாகாமல் இருக்க ஆலயத்தின் பிரதான காரியாலயத்தில் உள்ள ஆலய வளாகத்தை கண்காணிக்கும் சி.சி.ரி.வி. கமராவின் முழு இணைப்பையும் துண்டித்துள்ளனர்.
அத்துடன் சி.சி.ரி.வி. காணொளிகளை சேமிப்பு செய்யும் பதிவு கருவிகளையும் , பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா தடயவியல் பொலிஸார் கைரேகைகளை பதிவு செய்து , ஆலயத்தில் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கமரா பதிவுகளை கொண்டும் மோப்ப நாயின் உதவியுடனும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















