இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் அதிகமானோர் நாடு திரும்ப விரும்புவதால், இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தயாராகி வருகிறது.
குறிப்பாக தமிழகத்திலுள்ள அகதிகளில் பலர் இவ்வாறு நாடு திரும்பும் மனநிலைக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதி தெரிவித்ததாவது,
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிகமாகத் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள், தன்னார்வ அடிப்படையில், மீண்டும் தாயகம் திரும்புவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவர்களில் இருநூறு பேர் கடந்த ஆண்டு நாடு திரும்பினர்.
இவ்வாறு சென்றவர்களில் நால்வரை இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.இதையடுத்து நாடு திரும்புவதற்கு ஆர்வமாக இருந்த பலர், தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு நிகழாதிருப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தியாவில் சுமார் 80 ஆயிரம் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களில் 2002 ஆம் ஆண்டிலிருந்து 18,643 பேர், தன்னார்வ அடிப்படையில் தாயகம் திரும்பியுள்ளனர் என்றார்.


















