இந்தியாவை சமாளிப்பதற்காக பாதீட்டில் பணம் ஒதுக்கும் படலம் இடம்பெற்றுள்ளதாகவே புரிகிறன்றதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் சிவகரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலுக்கு பணம் ஒதுக்கி உள்ளதால் தேர்தல் நடைபெறக்கூடிய நிலை காணப்பட்டால் வடக்கு கிழக்கு மாகாணத்தின் நிலைமை எப்படி இருக்கும் என கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
கட்சிகளும் கட்சிகளுக்குள்ளும் முதலமைச்சர் பதவிக்கான ஆசையில் பலர் இப்பொழுதே கனவு காண்கின்றனர். அது யாருக்கு நனவாக போகிறதோ தெரியவில்லை. முதல்வருக்கு கடந்த முறையை போல் யாரையும் இறக்குமதி செய்கிறார்களோ தெரியவில்லை. ஏலவே ஒரு நீதியரசரை கொண்டு வந்த அனுபவம் உண்டு. தற்போது இன்னும் ஒரு நீதிபதியை கொண்டு வருவதற்கு ஒரு தரப்பு முயல்கிறது இந்தக் கறுப்பு கோட்டுகாரர்களால் தான் தமிழர் அரசியலே அதல பாதாளத்துக்கு போனது என்பது கடந்த காலத்து வரலாறு. பண ஒதுக்கீடு செய்தாலும் கூட சட்ட ரீதியாக இன்னும் மாகாண சபை தேர்தலுக்கான தடைகள் விலக்கப்படவில்லை. ஆகவே அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியே.
இந்தியாவை சமாளிப்பதற்காக பாதீட்டில் பணம் ஒதுக்கும் படலம் இடம்பெற்றுள்ளதாகவே புரிகிறது. அதிகாரம் இல்லாத மாகாண சபை தேர்தல் நடந்தால் கூட மக்களின் அன்றாட பிரச்சனையில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. சிலருக்கு பதவி சுகத்தையும் அரசியல் இருப்பையும் உணர்த்துமே தவிர மக்களுக்கு இதனால் பயன் கிட்டுமா என்பதை கடந்த காலத்துடன் ஒப்பிட்டால் பயனற்றது என்பதே புலனாகும்.


















