-இந்திய விஜயத்தின்போது சஜித் பிறேமதாஸ-
-இந்திய மீனவர் கைதுகளுக்கு காரணம் எல்லை தாண்டுவதே-
இந்தியா – இலங்கை இடையிலான மீனவர் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக நிரந்தர தீர்வைக்காண இரு நாடுகளும் கூட்டாக செயற்படவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார்.
இந்தியா விஜயம் செய்துள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, ‘இந்து – இலங்கை இருதரப்பு உறவுகள்’ என்ற தலைப்பில் ஏ.என்.ஐ செய்தி சேவையுடன் நடத்திய கலந்துரையாடலில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகளின் கடற் சட்டம் பற்றிய சாசனம் நடைமுறையில் உள்ளது என்றும், அதற்கு உட்பட்டு சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் மதித்து இரு தரப்பினரும் ஒன்றிணைந்து உரிய சட்டங்களை உருவாக்க வேண்டும்.
அத்துடன், சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கு இணங்க பிரச்சினைகளைத் தீர்க்க இரு நாடுகளும் உறுதியளிப்பது முக்கியம். மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், வருமானம் ஈட்டும் செயல்முறை சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்பதை இரு அரசாங்கங்களும் உறுதிப்படுத்த வேண்டும். நிரந்தரச் சட்டக் கட்டமைப்பு இல்லாமல் செயற்படுவதை விட, இரு தரப்பினரும் ஒரு நீடித்த தீர்விற்காக இணைந்து செயற்பட வேண்டும்.
மேலும், கச்சத்தீவு அருகே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் நுழைவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியான பிரச்சினைகள் நீடிப்பதாகவும், இது பெரும்பாலும் கைதுகள் மற்றும் கடல் எல்லைகள் தொடர்பான மோதல்களுக்கு வழிவகுக்கிறது என்றார்.


















