இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே. விஜேவர்த்தன, இன்று (12) மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் நா. வேதநாயகனை மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல் வளங்களின் பாதுகாப்புக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தலாக உள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வலைகளைப் பயன்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கடல் வழியாக நாட்டுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்த வேண்டுமென ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே. விஜேவர்த்தன, வடக்கு மக்களின் பாதுகாப்பு, கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் கடற்படை தொடர்ந்தும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படும் என தெரிவித்துள்ளார்.


















