கிரிக்கெட் உலகில் நடத்தப்படும் தனிப்பட்ட தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்ததும் முழு உலகினாலும் கவரப்படுவதும் மினி உலகக் கிண்ணம் என கருதப்படுவதுமான இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகிறது.
19 ஆவது ஐ.பி.எல் அத்தியாயம் நடப்பு சம்பியன் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் பெங்களுரில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகிறது.
இண்டியன் பிறீமியர் லீக்கில் உலகின் தலைசிறந்த வீரர்கள், பயிற்றுநர்கள், கிரிக்கெட் ஆய்வாளர்கள், அணிகளின் முகாமைத்துவ குழுவினர்கள், உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றினைவதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான இரசிகர்களுக்கு பெரு விருந்து காத்திருக்கிறது.
ஐ.பி.எல்.லில் சென்னை சுப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018, 2021, 2023) மற்றும் மும்பை இண்டியன்ஸ் (2013, 2015, 2017, 2019, 2020) ஐந்து தடவைகளும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2012, 2014, 2024) மூன்று தடவைகளும் நடப்பு சம்பயின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் (2025), ராஜஸ்தான் றோயல்ஸ் (2008), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016), குஜராத் டைட்டன்ஸ் (2022) ஆகியன ஒரு தடவையும் சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.


















