-சமூக செயற்பாட்டாளர் சச்சிதானந்தன் கவலை தெரிவிப்பு-
-த.சுபேசன்-
எமது வழக்கமான பழக்கவழக்கங்களில் இருந்து மாறி இயற்கையை பகைத்ததன் விளைவாக இன்று நாம் அருந்தும் தண்ணீர் தொடக்கம் சுவாசிக்கும் காற்று வரை பணம் செலவளித்தே பெறுகிறோம் என இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான ந.சச்சிதானந்தன் கவலை தெரிவித்துள்ளார்.
இன்று பெரும்பாலான மக்கள் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரையே பணம் செலுத்திப் பெற்று அருந்துகின்றனர்.
அதேநேரம் வளி சீராக்கி ஊடாகவே சுவாசிப்பதற்கான காற்றைப் பெறுகின்றனர். முன்னைய காலத்தில் காற்று, தண்ணீர் போன்றவை இயற்கையாகவும சுத்தமானதாகவும் சூழலில் இருந்து இலவசமாகவே கிடைத்தது. ஆனால் இன்று நாம் இயற்கையைத் தொலைத்ததன் விளைவாக சுத்தமான காற்று மற்றும் குடிநீரைப் பெறுவதற்குக் கூட பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பார்க்கும் இடமெல்லாம் பிளாஸ்ரிக்,பொலித்தீன் கழிவுகளே காணப்படுகின்றன. இவ்வாறான கழிவுகள் மழை வெள்ளத்துடன் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் ஊடாக மீளவும் எமது உடலை வந்தடைகின்றன.
அதேநேரம் பிளாஸரிக்,பொலித்தீன் கழிவுகளை புதைப்பது எமது மண் வளத்தைப் பாதிக்கின்றது,எரிப்பது காற்றின் தரத்தைப் பாதிக்கின்றது. மண்ணில் புதைக்கின்ற இவ்வாறான கழிவுகள் விவசாயத்தைப் பாதிக்கும் அதேவேளையில் விவசாய உற்பத்திப் பொருட்களுடன் கலந்து எமது உடலை வந்தடைவதாக ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.
பிளாஸ்ரிக் கழிவுகளை எரித்தல்,புதைத்தல் செயற்பாடுகளுக்கு எதிராக வளர்முக நாடுகளில் சட்டங்கள் உள்ளன. ஆனால் இலங்கையில் அவ்வாறான சட்டங்கள் இல்லை. இவ்வாறான இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்த உள்ளூராட்சி சபைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வருங்கால சந்ததி பாரிய விளைவுகளை சந்திக்கக் கூடும்.
அதேநேரம் உள்ளூராட்சி மன்றங்கள் பிளாஸ்ரிக் பொருட்களுக்கு மாற்றீடாக பனை,தென்னை,வாழை போன்றவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது எமது கிராமிய மக்களுடைய பொருளாதாரத்தை உயர்த்துவதுடன் தேக ஆரோக்கியமான எதிர்கால சந்ததியையும் கட்டியெழுப்பும என மேலும் அவர் தெரிவித்தார்.
















