-‘கணேமுல்ல சஞ்சீவ’ வழக்கில் கைதான சட்டத்தரணியிடம் விசாரணை-
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம கூறினர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவிக்கையில்:-
‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி கைது செய்யப்பட்ட வேளையில் கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனம் சுமார் இரண்டரை கோடி ரூபா பெறுமதியானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சொகுசு வாகனம் முதலில் வில்பிரட் திசாநாயக்க என்பவரின் பெயரில் இருந்துள்ளதாகவும், பின்னர் அது சட்டத்தரணிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சட்டத்தரணி இந்த சொகுசு வாகனத்தை வாங்குவதற்கு எவ்வாறு பணம் சம்பாதித்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், சட்டத்தரணிக்கு சொந்தமான வங்கி கணக்குகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.


















