வட மாகாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய, இன்றும் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி வட மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஆசரியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.
ஆசிரியர் சங்கத்தினரின் போராட்டத்தையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர்.
அதன்பின்னர் ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று ஆளுநருடனும் இது தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் ஆசிரியர் சங்கத்திற்கு சாதகமான தீர்வு வழங்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆசிரியர் சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஆசிரியர் சங்கத்தினரை ஆளுநர் சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















