கண்டி, பல்லேகலவில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இங்கிலாந்து 2:0 என்ற கணக்கில் சமன் செய்தது.
நேற்று முன்தினம் 7 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழந்து 189 ஓட்டங்களை குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான பத்தும் நிஸ்ஸங்க மற்றும் கமில் மிஷாரா ஆகியோர் 56 ஓட்டங்களை சேர்த்து இலங்கைக்கு வலுவான தொடக்கத்தை அளித்தனர்.
முதல் போட்டியில் தடுமாறிய நடுத்தர துடுப்பாட்ட வீரர்களும் அணியின் ஓட்ட இலக்கினை நிலைப்படுத்துவதற்கு பெரும் பங்கு ஆற்றினர்.
தனஞ்சய டி சில்வாவுக்குப் பதிலாக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்ட பவன் ரத்நாயக்க, 40 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
இவர் தவிர குசல் மெண்டீஸ் 32 ஓட்டங்களையும், சரித் அசலங்க 28 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
பின்னர் சேஸிங்கில் இங்கிலாந்து 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
இதனால் டக்வெத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்துக்கு 17 ஓவர்களில் 168 இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அணித் தலைவர் ஹாரி ப்ரூக் அதிரடி காட்டினார். 12 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உட்பட 36 ஓட்டங்களை எடுத்து, இங்கிலாந்தின் ஓட்ட வேகத்தை அதிகரித்தார்.
அடுத்து டோம் பென்டன் 33 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து பொறுப்புடன் ஆடினார்.
இதனால், இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் மற்றும் இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் 173 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக டோம் பென்டன் தெரிவானார்.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறவுள்ளது.


















