-ஒரு வருடத்துக்குமேல் காத்திருப்பு பட்டியல்-
அண்மைய நாட்களில் இருந்து இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 60 தொடக்கம் 70 வயதுக்குட்பட்டவர்களே இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தருவது வழக்கமானதாக இருந்தபோதிலும், சமீபகாலமாக 25 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளையவர்களும் இந்த சத்திரசிகிச்சைக்காக வருகை தருவதாக விசேட வைத்திய நிபுணர் நாலக்க திஸாநாயக்க தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் மேற்கொள்ளப்படும் இருதய சத்திர சிகிச்சையில் 65 தொடக்கம் 67 சதவீதமானவை பைபாஸ் சத்திர சிகிச்சையாகும். அண்மைய நாட்களில் இருந்து இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் வயதில் பைபாஸ் சிகிச்சைக்காக வருகை தருபவர்களின் எண்ணிக்கையும், வீதமும் சடுதியாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
அத்தோடு தொற்றா நோய்களும் சமூகத்தில் அதிகரித்துள்ளன. நோய் தொடர்பான தெளிவும் அவதானமும் இல்லாமையே நோயாளர் அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் விலா எலும்புகளை அகற்றி இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தற்போது நவீன சிகிச்சை முறைகளைப் பின்பற்றி எலும்புகளை அகற்றாது இடது பக்கமாக இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வயது வந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பால் மாரடைப்பு ஏற்படுகிறது. 60 தொடக்கம் 70 வயதுக்குட்பட்டவர்களே இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தருவது வழக்கமானதாக இருந்தபோதிலும், சமீபகாலமாக 25 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளையவர்களும் இந்த சத்திரசிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
இலங்கையில் கொழும்பு, கண்டி, காலி கராபிட்டிய ஆகிய தேசிய வைத்தியசாலைகளிலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஒரு சில வைத்தியசாலைகளில் மாத்திரமே இருதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிகிச்சைகள் வழங்கப்படுவதால், சத்திரசிகிச்சைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ள நோயாளர் காத்திருப்புப் பட்டியலில் ஒரு வருடத்துக்கும் அதிக காலத்துக்கு நீண்டுள்ளது என்றார்.


















