அர்க்காதக் விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டி குழுவுக்கான ஏ.எவ்.சி ஆசியக் கிண்ணம் – சவூதி அரேபியா 2027 இற்கான 3 ஆம் சுற்று தகுதிகாணின் இரண்டாம் கட்டப் போட்டியில் இலங்கையிடம் கடும் சவாலை எதிர்கொண்ட துர்க்மேனிஸ்தான் 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கொழும்பில் இலங்கையிடம் கடந்த 9 ஆம் திகதி அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்த துர்க்மேனிஸ்தான் இந்த வெற்றி மூலம் அதனை நிவர்த்திசெய்துகொண்டது.

இந்த வெற்றியுடன் டி குழுவுக்கான அணிகள் நிலையில் 9 புள்ளிகளுடன் துர்க்மேனிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
தாய்லாந்தும் 9 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் துர்க்மேனிஸ்தானிடம் முதல் கட்டத்தில் தோல்வி அடைந்ததால் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
முதலாம் கட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தானை 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு அதிரவைத்த இலங்கை, இரண்டாம் கட்டப் போட்டியின் ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் திறமையாகவும் விளையாடியது.
ஆனால், சொந்த மண்ணில் விளையாடுவதை அனுகூலமாக்கிக்கொண்ட துர்க்மேனிஸ்தான் ஆட்டத்தின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விளையாடியது.
ஆட்டத்தின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் கோல் போட கடுமையாக முயற்சித்தவாறு விளையாடின. ஆனால், இரண்டு அணிகளும் நிச்சயமான வாய்ப்புகளைத் தவறவிட்டன. இடைவேளையின்போது இரண்டு அணிகளும் கோல் எதனையும் போட்டிருக்கவில்லை.
இடைவேளைக்கு பின்னர் 5 நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் போட்ட துர்க்மேனிஸ்தான் ஆட்டத்தின் பிடியைத் தன்பக்கம் திருப்பியது.
52 ஆவது நிமிடத்தில் பெனல்டி எல்லையின் விளிம்பிலிருந்து துர்க்மேனிஸ்தான் வீரர் எல்மான் தகாயெவ் மிகப் பலமாக உதைத்த பந்து இலங்கை கோல்காப்பாளர் சுஜான் பெரேராவை கடந்து கோலினுள் புகுந்தது.
ஐந்து நிமிடங்கள் கழித்து சுஜான் பெரேரா தடுத்த பந்து திரும்பிவந்தபோது வேகமாக செயல்பட்ட மெக்கான் சப்பரோவ் பந்தை கோலினுள் புகுத்தி துர்க்மேனிஸ்தானை 2 – 0 என முன்னிலையில் இட்டார்.
எனினும் தளராமல் விளையாடிய இலங்கைக்கு 65 ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது.
மிக வேகமாக பந்தை முன்னோக்கி நகர்த்திச் சென்ற டிலொன் டி சில்வா பெனால்டி எல்லைக்குள்ளிருந்து உதைத்த பந்து துர்க்மேனிஸ்தான் வீரர் குச்மிரட் அனாகுலியேவ் மீது பட்டு கோலினுள்ள புகுந்தது.
எனினும், அதன் பின்னர் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளும் குறிக்கோளுடன் விளையாடிய துர்க்மேனிஸ்தான் எதிரணிக்கு கோல் போடும் வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை.
அடுத்த போட்டியில் தாய்லாந்தை தனது சொந்த நாட்டில் இலங்கை எதிர்த்தாடவுள்ளது. இப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நவம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதே தினத்தன்று சைனீஸ் தாய்ப்பேயை அர்க்காதக் விளையாட்டரங்கில் துர்க்மேனிஸ்தான் சந்திக்கவுள்ளது.


















