-ஐ.நா சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டு-
டித்வா புயலால் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமான வெள்ளம், நிலச்சரிவுகளால் நாடு முழுவதும் குழந்தைகள் அவசர மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, பல பகுதிகளை அணுக முடியாததால், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.
இழப்புகள் மற்றும் இடம்பெயர்வுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம், மேலும் துக்கப்படுகிறவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், என்று இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி எம்மா பிரிகாம் கூறினார்.
சூறாவளி கடந்துவிட்டாலும், விளைவுகள் இன்னும் கடந்துவிடவில்லை. 2022 பொருளாதார நெருக்கடி உட்பட சில பாதிப்புகளில் இருந்து மீண்டுவருவதற்கு போராடிக் கொண்டிருக்கும், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை டித்வா புயல் மேலும் பாதித்துள்ளது. உலக வங்கி 2025 அறிக்கையின்படி, 2019 முதல் வறுமை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இது 11.3 சதவீதத்திலிருந்து 24.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு, வாழ்க்கை கட்டுப்படியாகாமல் உள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, யுனிசெப் தனது முயற்சிகளை மேலும் விரிவுபடுத்தி, இடம்பெயர்ந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சுத்தமான குடிநீர், அத்தியாவசிய ஊட்டச்சத்து பொருட்கள், உளவியல் ஆதரவு மற்றும் அவசரகாலக் கல்விக்கான கருவிகளை வழங்கும் என்றார்.


















