இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றுமுன்தினம் நடந்தது.
நாணயச்சுழற்சியில் ஜெயித்து முதலில் துடுப்பாட்டம் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 357 ஓட்டங்கள் குவித்தது.
ஜேக்கப் பெத்தேல் 65 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். 20 ஆவது சதம் அடித்த ஜோ ரூட் 111 ஓட்டங்களுடனும் 3 ஆவது சதம் விளாசிய கப்டன் ஹாரி புரூக் 136 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ஓட்டத்தில் சகல விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவன் ரத்னாயகேவின் (121 ஓட்டம்) கன்னி சதம் வீணானது. இங்கிலாந்து தரப்பில் ஜாமி ஓவர்டான், லியாம் டாவ்சன், வில் ஜாக்ஸ், அடில் ரஷித் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இங்கிலாந்து கப்டன் ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதும், ஜோ ரூட் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் 2023 இற்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.


















