-அமெரிக்க தூதர் தெரிவிப்பு-
இலங்கை விமானப் படையுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்றமை குறித்து பெருமை கொள்வதாகவும் இலங்கையுடன் நண்பனாக இருப்பதில் பெருமை கொள்வதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்தார்.
இது குறித்து அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தனது X – தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
அமெரிக்க விமானப்படையின் C-130 Super Hercules விமானத்தின் மூலம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வழங்கிய அவசர நிவாரணப் பொருட்கள் இரண்டு முக்கிய இடங்களுக்கு வெற்றிகரமாக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
திருகோணமலை — கின்னியா, மூத்தூர், வெருகல் ஆகிய பகுதிகளுக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன, குறிப்பாக வீடு பழுது பார்க்கும் கருவிகள், தற்காலிக முகாம்களில் தங்கி இருந்த குடும்பங்களுக்கும் வீடு திரும்ப உள்ளவர்களுக்கும் உதவும் பொருட்கள், அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியன அடங்கும் இந்தப் பொருட்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கும் இடங்களைச் சீரமைத்து, பாதுகாப்பாக வீடுகளுக்கு திரும்ப உதவுவதற்காக அனுப்பப்பட்டன.
அனுராதபுரம் பகுதிக்கு மீட்பு மற்றும் அவசர நடவடிக்கை உபகரணங்களாக, கயிறுகள், ஜெனரேட்டர்கள், செயின்சா, நீர்ப் பம்புகள், அவசர விளக்குகள், முன்னெச்சரிக்கை, எச்சரிக்கை அமைப்புகள் இவை அனைத்தும் மாவட்ட மட்டத்தில் பேரிடர் மேலாண்மை திறன்களை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்டன.
அமெரிக்க நிபுணத்துவத்தையும், இலங்கை விமானப் படையினரின் ஒத்துழைப்பையும் பயன்படுத்தி, பெரும் அளவிலான நிவாரணப் பொருட்களை விரைவாக இறக்கி, தகுந்த இடங்களுக்கு அனுப்பியதாக அமெரிக்கத் தூதர் ஜூலி சங் காணொளியொன்றையும் வெளியிட்டு கூறியுள்ளார். இனி இந்த உதவிகளை ‘கடைசி கட்டத்தில்’பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளுர் அதிகாரிகளின் மற்றும் முன்கள வீரர்களின் பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கையுடன் நட்பு கொண்டிருப்பதில், இந்த முக்கிய தருணத்தில் உங்களுடன் நின்று உதவுவதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது என்று அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது பதிவில் வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளார்.
















